திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை வேளாண் பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (38). இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவி, மகன், மகள் உள்ளனர். இவர் அதே பகுதியில் விவசாயம் செய்தும், வேன் வைத்து வாடகைக்கு ஓட்டியும் வருகிறார்.
ஆவணங்கள் கொடுக்காததால் தகராறு
இந்நிலையில், கணேசன் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் ஒருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்கத்து தோட்டத்திலுள்ள மற்றொரு கணேசன் (46) என்பவரிடம் மோட்டார் சைக்கிள் ஒன்றை விலைக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், அதற்குரிய ஆவணங்களை அவர் மோட்டார் சைக்கிள் வாங்கிய கணேசனுக்கு கொடுக்காததால் தகராறு நிலவி வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு (ஜூன்.15) மற்றொரு கணேசன் தனது அண்ணன் மகனான மணிவண்ணன் பூபதியுடன் இருசக்கர வாகனத்தில் சிறுமலை, பழையூர் பகுதியிலிருந்து வேளாண் பண்ணை கிராமத்திற்கு சென்றுள்ளார்.
கத்தியால் தாக்கி கொலை
தாழக்கடை அருகே மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென காட்டுக்குள் மறைந்திருந்த கணேசன் கத்தியால் மற்றொரு கணேசனையும், அவரது அண்ணன் மகன் பூபதி ஆகிய இருவரையும் தாக்கியுள்ளார்.
அப்போது, மணிவண்ணன் பூபதி தப்பியோடியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மற்றொரு கணேசனை, கணேசன் சரமாரியாகக் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்தது திண்டுக்கல் தாலுகா காவல் ஆய்வாளர் பார்த்திபன், உதவி ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று இறந்த கணேசனின் உடலைக் கைப்பற்றி, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணேசனை தேடிவருகின்றனர்.