திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆர்.கோம்பை ஊராட்சியில் சீலகரடு என்ற பகுதியில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் சிட்கோ அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வருவாய்த் துறையினரால் சீலகரடு வனப்பகுதியில் 56 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு முதற்கட்டமாக சாலையமைக்கும் பணிக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன.
வனப்பகுதியை அழித்து உருவாகும் இத்திட்டை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கரூர் எம்.பி., ஜோதிமணி சிட்கோ அமைக்கும் இடத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "சிட்கோ அமைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இயற்கை வளத்தை அழிக்காமல் வனப்பகுதியில் சிட்கோ அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
சிட்கோ அமைப்பதாகக் கூறி அதிமுகவினர் மரங்கள், மண் போன்றவற்றை கொள்ளையடிப்பதை தடுக்கவே போராடுகிறோம். இயற்கையை சேதப்படுத்தாமல் இங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும்" என வலியுறுத்தினார்.
இதனிடையே, ஆர்.கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் மலர்வண்ணன் அதிமுக ஆதரவாளர்களுடன், எம்.பி. ஜோதிமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஓபிசி இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு பெற்றே தீரும் - அமைச்சர் விஜயபாஸ்கர்