திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மகளிருக்கான அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக, அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், கரோனா தொற்று அதிகரிப்பினால் இறுதியாண்டு தவிர்த்து, பிற ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
தற்போது கல்வி நிலையங்கள் இறுதியாண்டுத் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேர்வு நடக்கவிருக்கிறது.
இதில் தேர்வு எழுத முடியாத மாணவிகள் ஆன்லைனில் தேர்வு எழுதலாம் அல்லது அருகில் இருக்கக் கூடிய தேர்வு மையங்களில் தேர்வு எழுதலாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் தெரிவித்தார். மேலும், 12ஆம் வகுப்பு முடித்த மாணவிகள் பயில புதியதாக பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.