திண்டுக்கல்: பழனி ராஜாபுரம் ஊராட்சியில் வசித்து வருபவர்கள் மகேஷ்வரன்-லதா தம்பதி. 32 வயதான மகேஷ்வரன் பொள்ளாச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தையற்கலை தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 22 வயதான லதாவுக்கு 3 வயதில் லோகேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிறந்த மற்றொரு குழந்தைக்கு கோகுல் என பெயரிட்டு வளர்த்து வந்தனர். நேற்று (மார்ச்,23) மகேஷ்வரன் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் குழந்தையுடன் ஆற்றங்கரைக்கு குளிக்கச் சென்றதாகவும், யாரோ குழந்தையை தூக்கிச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார் லதா.
சடலமாக குழந்தை: ஆற்றங்கரையில் குழந்தையை காணவில்லை என லதா அழுததை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவர்களும் குழந்தையை தேடினர். அப்போது ஆற்றங்கரையில், அமலைச் செடிகளுக்கு நடுவே உயிரிழந்த நிலையில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து குழந்தையை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை முன்னதாகவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து பழனி தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தாய் மீது சந்தேகம்: குழந்தை மரணம் தொடர்பாக போலீசார் முறையான விசாரணையை துவங்கினர். ஆனால் லதாவின் வாக்குமூலம் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் தங்கள் பாணியில் குறுக்குக்கேள்விகளை போலீசார் எழுப்பினர். ஒரு கட்டத்தில் தாக்குப் பிடிக்காத லதா அழுதபடியே, பெற்ற குழந்தையை தானே கொன்றேன் என ஒப்புக் கொண்டார்.
ஜோதிடத்தில் நம்பிக்கை: போலீசாரிடம் லதா அளித்த வாக்குமூலத்தில், குடும்பத்தில் கணவன் மனைவி இடையே தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டிருந்ததாகவும், தனக்கும் நீண்டகாலமாக வயிற்று வலி இருந்து வந்ததாகவும் கூறியுள்ளார். உடல்நல பிரச்சனைகளால் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்ள முடிவு செய்திருந்த போதும் , எதிர்பாராதவிதமாக இரண்டாவது குழந்தையும் பிறந்துள்ளது. குழந்தை கோகுலுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்து வந்துள்ளன. உடல்நலக் கோளாறுகள், வறுமை என அனைத்தும் சேர்ந்து அழுத்தவே ஜோதிடத்தின் உதவியை நாடியுள்ளார் லதா.
பாசத்தை விஞ்சிய மூடநம்பிக்கை: 15 நாட்களுக்கு முன்பு ஜோதிடம் பார்த்த போது, இரண்டாவதாக பிறந்த குழந்தையின் நேரம் சரியில்லை எனவும் அதுவே பிரச்சனைகளுக்கு காரணம் என்றும் கூறியுள்ளார் ஜோதிடர். ஜோதிடத்தை அப்படியே நம்பிய லதா குழந்தை கோகுலை, கொல்ல முடிவு செய்தார். ஆற்றில் குளிக்கச் சென்ற போது, பெற்ற குழந்தை என்றும் பாராமல் நீரில் மூழ்கடித்து கொன்ற பின்னர், ஆற்றங்கரையில் குழந்தையின் உடலை வீசியுள்ளார். பின்னர் குழந்தை காணாமல் போனது போன்று நாடகமாடியதாகவும் போலீஸ் விசாரணையில் ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து லதாவை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். உடல்நலக்குறைவால், ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருத்துவ தீர்வு காண முற்படாமல் மூடநம்பிக்கையை கலந்து குழப்பிக் கொண்டதால், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் லதா