பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்குவதற்கான பாலாலய பூஜை நடைபெற்றது. பூஜையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமசந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள், பாத விநாயகர் கோயில், மலை மீதுள்ள இடும்பன் கோயில், வள்ளி சுனை, மயில் வாகனங்கள் உள்ளிட்ட கோயில் கோபுரங்கள், மண்டபங்கள் ஆகியவற்றின் திருப்பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. திருப்பணிகளுக்கான பாலாலய பூஜை கடந்த 30ஆம்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.
இன்று நடைபெற்ற யாக பூஜையில் புனித தீர்த்தங்களுடன் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு ஆவாகனம் செய்யப்பட்டது. பின்னர் கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டது. மேலும், இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ஓராண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலாலய நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர். ராமச்சந்திரன், வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, கோயில் இணை ஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ’தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் அதிமுக சந்திக்கும்' - ஓபிஎஸ் !