திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தனியார் பள்ளி ஒன்றின் பொன்விழா நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ‘இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டமாக மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் உள்ளது. ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவியாக 14 வகையான பொருட்களை வழங்க வேண்டும் என்று திட்டம் வகுத்தவர் ஜெயலலிதா. கல்வி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். தனியார் பள்ளிக்கு இணையாக சீருடை வழங்குகிறோம், அரசுப் பள்ளிக்கும் தனியார் பள்ளிக்கும் இடையே போட்டி இருக்கும். ஆனால் பொறாமை இருக்காது.
இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் இரண்டு லட்சம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு இதனை ஐந்து லட்சமாக உயர்த்த அரசு முயற்சி செய்துவருகிறது. எல்கேஜி முதல் அனைத்து பள்ளி மாணவ மாணவிகள் சேர்க்கை குறித்த பட்டியல் எங்களிடம் உள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது குறையவில்லை. 12 ஆண்டு காலம் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படவில்லை. தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடத்துபவர்கள் அச்சப்படும் வகையில் இந்த பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று 12ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தை படித்தாலே நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய தேர்வுகளை எழுதுவதற்கு விடைகள் எளிதில் கிடைக்கும்’ என்று கூறினார்.
இதையும் படிங்க: 25 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பட்டய கணக்காளர் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்