திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி முன்னிலையில், மாங்கரை ஊராட்சியில் புதிய நியாயவிலைக்கடை, தருமத்துப்பட்டி ஊராட்சி டி.புதூரில் புதிய அங்கன்வாடி மையம் ஆகியவற்றை நேற்று (ஜன.4) திறந்து வைத்து எம்.அம்மாபட்டி, மாங்கரை, கோனுார், கசவனம்பட்டி, கரிசல்பட்டி, தருமத்துப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில், கசவனம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள கோயில் மண்டபத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பட்டியலின மக்கள் தங்கள் பகுதியில் சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரிடம் புகார் அளிக்க மேடைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திண்டுக்கல் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மூன்றாவது கிளை திமுகவின் தொழிற்சங்கமான, தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் முருகவேல் மனு கொடுக்கச் சென்ற மக்களை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து நிகழ்ச்சி முடிந்தவுடன், முருகவேல் வெளியே செல்லும் பொழுது, அப்பகுதி மக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் முருகவேலிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது மண்டபத்திலிருந்து வெளியில் வந்த ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளைத் தலைவர் முருகவேலை நாக்கை துருத்திக் கொண்டு லேசாக அடித்துள்ளார்.
இதனை அடுத்து முருகவேல் மண்டபத்தை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அமைச்சர் அப்பகுதி மக்களிடம் தங்கள் கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்படும் என உறுதி அளித்துச் சென்றார். தொடர்ந்து அப்பகுதி மக்கள் நிகழ்ச்சி முடிந்து தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்ற ஊராட்சி மன்றத் தலைவர் சக்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு டெண்டரில் மோசடி; அமைச்சர்கள் மீது சவுக்கு சங்கர் புகார்!