திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 2019-20ஆம் ஆண்டிற்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட 80 இரு சக்கர வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் முதற்கட்டமாக 55 மாற்றுத்திறனாளிகள் விலையில்லா பெட்ரோல் மூலம் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.
மீதமுள்ள 25 பயனாளிகளுக்கு ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் இரு சக்கர வாகனங்களை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் துரிதமாக வழங்கப்பட்டுவருகிறது.
குறிப்பாக தமிழ்நாடு அரசு பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல முன்னோடி திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து அத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று தங்கள் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றிக் கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நல்ல ஆலோசனைகளை யார் கூறினாலும் எடப்பாடி அரசு ஏற்கும் - ராஜேந்திர பாலாஜி!