திண்டுக்கல் வனமண்டலத்தில் 216 வனக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு சுயத் தொழில் கடன் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு மாதம்தோறும் வசூல் செய்து கிராம வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் வேலைகளுக்குச் செல்ல முடியாத நிலையில் வறுமையில் வாடி வருகின்றனர். இதனால் கிராம வனக்குழுக்களில் நலிவடைந்த மக்களை கிராம வனக்குழு உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுத்து நிவாரணப் பொருள்களாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு முதல்கட்டமாக சுமார் 200 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சுமார் 2000 குழுக்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வன அலுவலர், வன பணியாளர்கள் மூலம் அந்தந்த கிராமங்களிலேயே வழங்கப்பட உள்ளது.
திண்டுக்கல் வன வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். இதனிடையே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர், மேடையில் பேசிய அலுவலர்களிடம் சரமாரியான கேள்விகளை முன்வைத்தார். முதலில் நிவாரணத் தொகுப்பிலுள்ள பொருட்கள் குறித்து கரூர் வன அலுவலரிடம் கேட்டார். அவர் அது குறித்து விளக்கும் முன்னரே அதன் விலைப்பட்டியல் குறித்து விளக்கச் சொன்னார். இப்படி ஒருவர் பின் ஒருவராக அனைத்து அலுவலர்களிடமும் கேள்விகளை கேட்டவாறே இருந்தார். அலுவலர்கள் தெளிவுப்படுத்தும் முன்னரே இதைக் கூட தெரியாதா என்று கடித்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, மாவட்ட வன அலுவலர், கரூர் மற்றும் கோட்ட வன அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க... திண்டுக்கல்: குடிபெயர்ந்த தொழிலாளிகள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைப்பு!