திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட தாழையூத்து, கோரிக்கடவு, கீரனூர், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி, “2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கு 37,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான திட்டங்களை ஏற்படுத்தியவர், தமிழ்நாடு முதலமைச்சர். மதிய உணவுத் திட்டத்தை முதன் முதலாக கொண்டு வந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை ஆண்டு தோறும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து, அதனை சட்டம் ஆக்கியவர் கருணாநிதி.
பின்னர் மாதம் ஐந்து முறை முட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்தவர், கருணாநிதி. தற்போது நமது தமிழ்நாடு முதலமைச்சர் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி அறிவித்ததோடு, நாள்தோறும் விதவிதமான உணவுகளை வழங்கி அதற்கான தனி ஐஏஎஸ் அலுவலரை அறிவித்துள்ளார்” என கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பொன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இரண்டு ஆண்டுகளாக இலவச லேப்டாப்கள் வழங்கப்படாதது ஏன் தெரியுமா?