திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் அருகே உள்ளது, பொம்மனங்கோட்டை கிராமம். இங்கு வசித்து வரும் சுமார் 120க்கும் மேற்பட்ட பெண்கள், தொடர்ந்து 20ஆவது ஆண்டாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை அணிந்து, இருமுடி கட்டி செல்கின்றனர். இந்த நிலையில், ஒட்டன்சத்திரத்தில் ஜேபிஎஸ் என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சுற்றுலா பேருந்தை பயணத்துக்காக பேசியுள்ளனர்.
மேலும் 2 பேருந்துக்கும் சேர்த்து ரூ.1,40,000 வாடகையாக பேசப்பட்டுள்ளது. இதில் பாதி பணத்தை சுற்றுலா பேருந்து உரிமையாளர் முன்பணமாக பெற்றுள்ளார். பின்னர் மீதமுள்ள தொகையும் உரிமையாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 2 பேருந்துகள் பேசப்பட்ட நிலையில், ஒரு பேருந்து காலதாமதமாக வந்துள்ளது.
அதேநேரம் மற்றொரு பேருந்து வேறொரு கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் விசாரிக்கையில், ஒரே பேருந்தை இரண்டு கிராமத்துக்கு அனுப்பியதும், இரண்டு கிராமத்தினரிடம் இருந்தும் தனித்தனியாக பணத்தை பெற்றுக்கொண்டதும் தெரிய வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், உள்ளூர் ஓட்டுநரை வைத்து, வேறொரு கிராமத்துக்குச்சென்ற சுற்றுலா பேருந்தை, பொம்மனங்கோட்டை கிராமத்துக்கு எடுத்து வந்து சிறைப்பிடித்தனர்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரெடியாஸ்திரம் காவல் துறையினர், பேருந்தை விடச் சொல்லி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பேருந்தின் உரிமையாளர் நேரடியாக வந்தால் மட்டுமே சிறைப்பிடித்த பேருந்து விடுவிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: பனிமூட்டத்தால் குளத்தில் கவிழ்ந்த பேருந்து - 50 பேர் காயம்!