பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து 11ஆம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி மாணவர்கள் தற்போது தங்களது பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு தேர்விற்கான நுழைவுச் சீட்டினை பெற்றுக்கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு நுழைவுச்சீட்டுடன் முகக்கவசங்கள் வழங்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
அது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக பொதுத்தேர்வு எழுதுவதற்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன.
அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலா 3 முகக்கவசங்களும், 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 1 முகக்கவசமும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள், அவற்றை நுழைவுச் சீட்டுடன் பெற்றுக்கொள்ளலாம்" என்றார்.