திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்களவையில் வருகின்ற திங்கட்கிழமை தேசிய குடியுரிமை சட்ட மசோதா கொண்டு வரப்படவுள்ளது. இதில் இஸ்லாம் மதத்தினரை தவிர மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்குவது, மத பிளவுகளை உண்டாக்கும்.
ஏற்கெனவே இந்தியாவில் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் உள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்க எந்தவித மசோதாவும் இதுவரை கொண்டு வரப்படவில்லை. அது குறித்து நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குரல் கொடுப்போம்.
வெங்காயம் போலத்தான் மத்திய அரசு உள்ளது. வெங்காய விலை மட்டுமில்லாமல் மற்ற விவசாயிகள் விஷயத்திலும் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது. அதேபோன்று தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருக்கிறது. குற்றவாளிகளை உரிய முறையில் தண்டிக்காமல் அவர்களுக்கு காவல் துறை துணை போகிறது.
தெலங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால், காவல் துறையினரே தண்டனை என்ற பெயரில் கொன்றிருப்பது சரியான முறையா?
அரசியல் பின்புலம் இல்லாதவர்களுக்கு ஒரு தண்டனையும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு வழக்கிலிருந்து பிணை வழங்கப்படுவது சரியான நீதியல்ல. இதே தவறு செய்பவர்கள் அனைவரையும் என்கவுன்டர் செய்துவிட முடியுமா? இது போன்ற காவல் துறையினரின் நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பதற்கு நீதித்துறையின் தோல்வியே காரணம்.
ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் எதை செய்யவேண்டும் என்று மட்டுமே பேசுவார்கள். ஆனால், இனி நாம் ஆண்கள் எதை செய்யக்கூடாது என்பதை பற்றித்தான் பேச வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: பாதிரியாரை ஆபாசமாக பேசி தாக்கிய பாஜக நிர்வாகிக்கு சிறை!