திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள பூசாரிபட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன். இவர் ஈயம் பூசும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள், இரண்டு மகன்கள் உள்ளனா். முதல் மனைவி ரேவதிக்கும் பாலமுருகனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ரேவதி உசிலம்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால், மனைவியை சோ்த்து வைக்கக்கோரி வத்தலக்குண்டு காவல்நிலையத்தில் பாலமுருகன் புகார் அளித்தார். இது குறித்து காவல்துறையினரும் விசாரணை செய்வதாக கூறினர். இந்நிலையில், பாலமுருகன் தனது மனைவி வரமாட்டாள் என நினைத்து காவல்நிலையம் முன்பாக தற்கொலை செய்து கொள்வதாகக்கூறி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார். அப்போது, பாலமுருகனை காப்பாற்ற எண்ணி பெண் காவலர் மஞ்சுளா கத்தியை பிடுங்க முயற்சித்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மஞ்சுளா கையில் கத்தி பட்டு காயம் ஏற்பட்டது. உடனே பாலமுருகன் தனது கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். உடனடியாக காவல் நிலைய ஆய்வாளர் பவுலோஸ், சக காவலர்கள் விரைந்து பாலமுருகனையும், காவலர் மஞ்சுளாவையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைை அளிக்கப்பட்டு வருகிறது.