திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் முத்துகுமார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நேற்று இவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து, பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இரவில் இவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், மருத்துவர் கருப்புசாமியை அலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பணியாளர்கள் அழைத்துள்ளனர். ஆனால் மருத்துவர் வர மறுத்ததை அடுத்து, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு முத்துகுமாரை உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு முத்துகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், முத்துகுமாரின் இறப்பிற்கு மருத்துவர் கருப்புசாமியே காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பழனி நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முத்துகுமாரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, உறவினர்கள் அவரது உடலை எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க... மருத்துவருக்கு கரோனா: தனிமைப்படுத்தப்பட்ட செவிலியர்கள்