திண்டுக்கல் மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், அழகர்சாமிக்கு கடந்த ஒருவார காலமாக கடும் காய்ச்சல் இருந்தது. இதனால் அழகர்சாமி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் பிரிவில் நேற்று (ஜூலை 22) அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
காய்ச்சல் குறையாத காரணத்தினால் தனக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் இன்று காலை மருத்துவமனையில் இருந்து தப்பியுள்ளார். அங்கிருந்து வெளியே வந்த அழகர்சாமி கல்லறைத் தோட்டத்தின் எதிரே உள்ள உயரழுத்த மின் கோபுரத்தில் ஏறி மின்சாரம் பாயும் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மின்சார ஊழியர்களை வரவழைத்து மின் கம்பத்தில் தற்கொலை செய்து கொண்ட அழகர்சாமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பேராவூரணி தொகுதி எம்எல்ஏ-வுக்கு கரோனா!