திண்டுக்கல்: தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளானது கிராமங்கள் தொடங்கி நகா்புறம் வரை விமர்சையாக கொண்டாடப்படும். நமது பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமான பண்டிகை என்பதால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கலின் போது அரிசி, வெல்லம், நெய் சேர்த்து பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து கொண்டாடுவது வழக்கம். இதற்காக பெரும்பாலும் சுடுமண்பானைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதுதொடர்பான தொழில்களும் நடக்கின்றன. பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களே உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டியில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மண்ணை எடுத்து வந்து பானை செய்யும் பணி தொடங்கப்படுகிறது. அதை பக்குவமாக காய வைத்து, பிசைந்து ஊற வைத்து, பின்னர் தண்ணீர் ஊற்றி குழைத்து அந்த களிமண்ணை திருவையில் வைத்து பானை வடிவமைக்கப்படுகிறது.
அதன்பின் மூன்று மணி நேரம் நிழலில் காயவைத்து சூளையில் அடுக்கி சுடப்பட்டுகிறது. இறுதியாக மண்பானைகள் உருவாகின்றன. பிறகு வண்ணம் தீட்டி விற்பனைக்காக மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும், கரூர், தேனி, ஈரோடு, திருப்பூருக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க:கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்