திண்டுக்கல்: கொடைக்கானலைச் சேர்ந்தவர் வனிதா, பண்ணைக்காடு பகுதியில் அனுமதியின்றி கட்டடம் கட்டப்பட்டு சட்டவிரோதமாக செயல்படும் கேஸ் சிலிண்டர் சேமிப்பு கிடங்கினை அகற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் அமைந்துள்ள பண்ணைக்காடு கிராமத்தில் எப்போதும் அதிக வெயில் மற்றும் அதிக குளிர் இல்லாமல் தட்பவெப்ப நிலை சீராக காணப்படும். இதனாலேயே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் எங்கள் கிராமத்தில் இடங்கள் வாங்கவும், பண்ணை வீடுகள் அமைக்கவும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆகவே, கட்டடம் கட்டுவதற்கான விதிகளை பண்ணைக்காடு டவுன் பஞ்சாயத்து மிகுந்த கவனத்துடன் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் எங்கள் கிராமத்தில் உள்ள சுமார் 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் கட்டடம் கட்டப்பட்டு, கேஸ் சிலிண்டர்களை சேமித்து வைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் சேமிப்பு கிடங்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கட்டடமானது முறைப்படி வரைபட அனுமதி இல்லாமலும், DTCP அனுமதி இல்லாமலும் கட்டப்பட்டுள்ளது. மேலும் PESO உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டர் சேமிப்புக் கிடங்கினை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே, முறையாக அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக செயல்படும் கேஸ் சிலிண்டர் சேமிப்புக் கிடங்கினை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரர் குறிப்பிடும் கட்டடம் கட்டுவதற்கான எந்த ஒரு அனுமதியும் அரசு தரப்பில் வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நீதிபதிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் கூடுதல் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் மதுரை மாவட்ட ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் துணை பொது மேலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.