திண்டுக்கல் அதிமுக அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘திமுக தலைவர் ஸ்டாலின் எப்போதுமே எங்கள் கட்சியின் பேச்சிற்கு எதிராகவே செயல்படுவார். உண்மையில் உள்ளாட்சித் தேர்தல் மூன்று ஆண்டுகளாக நடக்காமலிருக்க ஸ்டாலின்தான் காரணம். தற்போது நடைபெறவிருக்கும் இந்த தேர்தலை நிறுத்துவதற்கு ஸ்டாலின் எந்த வேலையும் செய்யவேண்டாம் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் முழுமையான வெற்றிபெறும். தொடர்ச்சியாக நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் வெற்றியின் மூலம் அதிமுக இயக்கத்துக்கு எழுச்சியும், திமுகவுக்கு வீழ்ச்சியும் உண்டாகி இருக்கிறது. ஆட்சியர், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் யாரையும், எப்பொழுது வேண்டுமானாலும் நிர்வாக காரணங்களுக்காக மாற்றலாம். இது நிர்வாக சீரமைப்பில் நடைபெறும் பொதுவான ஒரு நடவடிக்கைதான்.
எதிலும் வெற்றிடம் கிடையாது. ஒருவர் சென்றால் அவரை விட திறமையான மற்றொருவர் வந்துகொண்டே இருப்பார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இறந்த பின்பு மூன்றாண்டுகள் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எங்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர், துணை முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர்’ என்று கூறினார்.