திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த சில நாள்களாக தொடர்ந்து மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மலைச்சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி செல்லக் கூடிய பிரதான சாலையில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியின் வழியே வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
மேலும், அந்தப் பகுதியில் மரங்களும் சாய்ந்துள்ளன. இதனையறிந்த அப்பகுதி மக்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உதவியுடன் மண்சரிவு மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து மலைச்சாலைகளில் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து தடுப்புகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கோவின் செயலியில் 3.5 லட்சம் சிறார்கள் முன்பதிவு!