திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நீர்த்தேக்கம், அப்பகுதி மக்களின் பிரதான குடிநீர் ஆதாரமாகும். இதில் ராஜவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள தடுப்பணையின் காரணமாக குடகனாறு பாசன விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்ப்பாசன வசதியின்றி தவித்து வருகின்றனர். இதனால் இந்தத் தடுப்பணையை அகற்ற வேண்டும் என குடகனாறு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (செப்.27) குடகனாறு பாசனப் பகுதி விவசாயிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் அனுமந்தராயன் கோட்டையில் நடைபெற்றது. இதில் ஆத்தூர் முதல் வேடசந்தூர் வரையிலான பல விவசாயப் பிரதிநிதிகளும் தன்னார்வலர்களும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நரசிங்கபுரம் ராஜாவாய்க்காலில் மரபுவழி குடகனாறை இடைமறித்துக் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்றுவது குறித்தும், முறையான நீர்பங்கீடு பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவிடம் (நீர்வள ஆதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை) குடகனாற்றின் பூர்வீக வரலாற்று அரசு ஆவணங்கள், வரைபடங்களை முழுமையாக வழங்கி நியாயம் கோருவது என முடிவெடுக்கப்பட்டது. மேலும் இவ்விவகாரத்தில் அடுத்தகட்டமாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: '9ஆம் நூற்றாண்டு கல் செக்கு' - ஆண்டிப்பட்டி டூ கிண்ணிமங்கலம் என்ன தொடர்பு?