திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் மேல், கீழ் மலை கிராமங்கள் என பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இவர்கள் வெள்ளைப் பூண்டு, உருளைக்கிழங்கு ,பீன்ஸ், கேரட், அவரை உள்ளிட்ட விவசாய பயிர்கள் பயிரிட்டுவருகின்றனர்.
தற்போது தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி வங்கி கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கண்டறியப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து கொடைக்கானலில் 16 மேல்மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் சுமார் 366 போலி வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டு, 204 விவசாயிகளிடமிருந்து, சுமார் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சீனிவாசன் கூறுகையில், “கிசான் திட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும் மீதமுள்ள 162 போலி வங்கி கணக்குகள் இடமிருந்து சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.