உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதன் பாதிப்பு இந்தியாவையும் மிரட்டிவருகிறது.
தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. மலைப்பகுதியில் இந்த நோய் பரவினால் கடும் தாக்கம் ஏற்படும் என்பதற்காக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் கொடைக்கானல் பகுதியில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் தனியார் உணவக விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டார மருத்துவர் சந்தோஷ், வட்டாட்சியர் வில்சன் ஆகியோர் தலைமை வகித்தனர். இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகப் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் சந்தோஷ் கூறுகையில், "கொடைக்கானலில் நாளை (18ஆம் தேதி) முதல் நாள்தோறும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் கொடைக்கானல் வருவதற்கு தடைசெய்யப்படும். இதற்காக கொடைக்கானல் - வத்தலகுண்டு சாலையில் காமக்காபட்டி சோதனைச்சாவடியிலும் பழனி அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
அதேபோல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் உணவகங்களில் முன்பதிவு செய்வது நிறுத்தப்படும். நாளை (மார்ச் 18) முதல் உணவகங்களில் வெளிநாடு, வெளி மாநிலத்தவர் தங்கியிருப்பது குறித்த தகவல்களை நாள்தோறும் காலை 9 மணிக்குள் காவல் நிலையத்தில் வழங்க வேண்டும்.
கொடைக்கானலுக்கு வருகைதரும் சுற்றுலா வாகனங்களும் நகரிலிருந்து வெளியே செல்லும் வாகனங்கள் அனைத்திலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படும். வெள்ளி அருவி பகுதியில் பயணிகள் கைகளைக் கழுவுவதற்காக கை கழுவும் இடம் அமைக்கப்பட உள்ளது.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளும் நாளை (18ஆம் தேதி) முதல் தொடங்கும். இதற்காக நகராட்சியில் உள்ள 165 துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவ அலுவலர்கள் திண்டுக்கல் தாலுகாவில் உள்ள பல்வேறு வட்டார மருத்துவ அலுவலர்கள் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபடுவார்கள்" என்று கூறினார்.
இதையும் படிங்க: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - திற்பரப்பு அருவியில் பயணிகள் குளிக்கத் தடை