திண்டுக்கல்: கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. கொடைக்கானலில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாக இருந்து வருவதால், பெரும்பாலான சுற்றுலா இடங்களும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களாக இங்குள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மர காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் விளங்குகின்றது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு விருப்பமான பகுதிகளுக்கு சென்று தங்களது பொழுதை கழித்து மகிழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பைன் மரக்காடுகள் பகுதியில் வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் மீண்டும் சுற்றுலா தலங்களுக்கு சென்று ரசிக்க வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
குறிப்பாக ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், இன்சூரன்ஸ், வாகனத்தின் மாசு சான்றிதழ் உள்ளிட்டவை கட்டாயம் என அறிவித்துள்ளது. மேலும் இன்று முதல் சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று கண்டு கழிக்க கட்டணமும் வனத்துறை மூலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெரியவர்களுக்கு 30 ரூபாயும் வெளிநாட்டவருக்கு 300 ரூபாயும், 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 20 ரூபாயும் வெளிநாட்டவர்க்கு 200 ரூபாயும், ஐந்து முதல் 12 வரையிலான தனியார் பள்ளி குழந்தைகளுக்கு 20 ரூபாயும், வெளி நாட்டவருக்கு 200 ரூபாயும், ஐந்து முதல் 12 வரையிலான அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி குழந்தைகளுக்கு 5 ரூபாயும், வெளிநாட்டவருக்கு 50 ரூபாயும் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீடியோ கேமரா மற்றும் கை கேமரா ஆகியவற்றிற்கு 300 ரூபாயும், வெளிநாட்டவருக்கு 3000 ரூபாயும், ஸ்டில் கேமராவிற்கு 50 ரூபாயும், வெளிநாட்டவருக்கு 500 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பேருந்துகளுக்கு 100 ரூபாயும் வெளிநாட்டவருக்கு 1000 ரூபாயும், கார் மற்றும் வேன்களுக்கு 50 ரூபாயும், வெளிநாட்டவருக்கு 500 ரூபாயும், இருசக்கர வாகனத்திற்கு 20 ரூபாயும், வெளிநாட்டவருக்கு 200 ரூபாயும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கொடைக்கானல் வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதல் சோதனை சாவடியில் வாகனங்களின் ஆவணங்கள் சரிபார்த்தும், இரண்டாம் சோதனைச் சாவடியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் உள்ளூர் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை: இதுவரை எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் தெரியுமா?