திண்டுக்கல்: கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ளதால், வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை சீர் படுத்துவது தொடர்பாக கொடைக்கானல் வருவாய் கோட்டாசியர் அலுவலகத்தில் இன்று (ஏப். 22) ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கொடைக்கானல் வருவாய் கோட்டாசியர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வருவாய் கோட்டாசியர் முருகேசன், "கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியிலும், டோல்கேட் பகுதியிலும் இரு வழிப்பாதைகளை திறந்து போக்குவரத்தை சீர் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கொடைக்கானல் ஏரி, கொடைக்கானல் நகர் உள்ளி்ட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை, வரும் மே 1-ம் தேதி முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
முக்கிய சாலைகளில் நிறுத்தப்படும் சுற்றுலா பேருந்துகளை மாற்று இடங்களில் நிறுத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்".
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு - மக்கள் அவதி