திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அண்மைக்காலமாக போதைக் காளான் கலாசாரம் அதிகரித்து வருகிறது. வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் பலரும் இதை தேடிப்பிடித்து சாப்பிடுவதும், உள்ளூரில் இருப்பவர்கள் இதனை விற்பனை செய்வதும் அதிகரித்து காணப்படுகிறது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, கேரள மாநிலம், கோட்டயத்தில் இருந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக கொடைக்கானலுக்கு ஐந்து இளைஞர்கள் வந்தனர். பூண்டி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி அறை எடுத்த அவர்கள், போதை காளானைத் தேடி வனப்பகுதிக்குச் சென்றனர். இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து போதைக் காளானை தேடிய நிலையில், திரும்பி வர வழி தெரியாமல் அடர் வனத்தில் சிக்கிக்கொண்டனர். உணவு, தண்ணீர் இன்றி மூன்று நாட்களாக தவித்து வந்தனர்.
பின்னர், தீத்தடுப்பு கோடுகள் போடும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், இவர்களை கண்டுபிடித்து நேற்று(ஜன.5) பூண்டி கிராமத்தில் கொண்டு வந்து விட்டனர். இதையடுத்து ஐந்து பேரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர். கொடைக்கானலில் போதைக் காளான் கலாசாரம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கு போதைக் காளான் விற்பவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு போதைக் காளானை விற்று வந்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பாலையா, கோபாலகிருஷ்ணன் மற்றும் சசிகுமார் ஆகிய மூன்று பேரை கொடைக்கானல் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போதைக் காளான் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானலில் போதைக் காளான் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் பெருகும் போதை காளான் கலாசாரம் - கண்டுகொள்ளுமா காவல் துறை?