திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடமாக ஏரிச்சாலை அமைந்துள்ளது. இங்கு வரும் பயணிகள் ஏரிச்சாலையை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி மேற்கொள்வது வழக்கம்.
இந்த சூழ்நிலையில் கொடைக்கானலில் அவ்வபோது மழையும் திடீரென கனமழையும் பெய்து வருவதால், ஆங்காங்கே மரங்கள், பாறைகள் சரிந்தும் வருகின்றன. இதைத் தொடர்ந்து, ஏரிச்சாலையில் காய்ந்த நிலையில் இருந்த மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அப்பகுதி வழியே சுற்றுலாப் பயணிகள், வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர், மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஏரிச்சாலை சுற்றி ஆபத்தான நிலையில், உள்ள மரங்களை அகற்ற வேண்டுமென சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.