திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஹிந்துஸ்தான் யுனிலிவர் பாதரச கம்பெனி 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது அங்கு வேலை பார்த்து வந்த சுமார் 1200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தன. இதன் காரணமாகப் பல்வேறு போரட்டங்கள் நடைபெற்றன.
இதனையடுத்து 2001ஆம் ஆண்டு பாதரச கம்பெனி மூடப்பட்டது. இதனைத்தொடர்ந்து தொழிற்சாலையில் வேலை பார்த்ததன் விளைவாக ஏற்பட்ட உடல் உபாதைகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வெட்டப்பட்ட மரங்கள்
இந்த நிறுவனம் வனப்பகுதி அருகே அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் இங்கு உள்ள 300-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மரங்கள் வெட்டப்படுவதால் அப்பகுதியில் படிந்திருக்கும் பாதரச கழிவுகள் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அகற்றப்படாத பாதரசம்
2001ஆம் ஆண்டு மூடப்பட்ட இந்த நிறுவனத்திலிருந்து பாதரச கழிவுகள் முழுமையாக அகற்றப்படவில்லை எனறும், அது மண்ணிலோ, தண்ணீரிலோ, காற்றிலோ, உடனடியாக கலக்கக்கூடிய தன்மைகொண்டது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
![மூடப்பட்ட பாதரச தொழிற்சாலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-01-kodaikanal-hul-company-special-vs-spt-tn10030_20082021171816_2008f_1629460096_278.jpg)
மூடப்பட்ட பாதரச ஆலையால், மனிதர்கள் மட்டுமே பாதிப்படைந்த நிலையில், தற்போது மரங்கள் வெட்டப்படுவதால் வனங்களும், வனத்தை சார்ந்த விலங்குகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
வனப்பகுதிக்கு மிக அருகே உள்ள இடத்தில் மரங்களை வெட்டுவதற்கு அலுவலர்கள் எவ்வாறு அனுமதி கொடுத்தார்கள் என்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
![மூடப்பட்ட பாதரச தொழிற்சாலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-01-kodaikanal-hul-company-special-vs-spt-tn10030_20082021171816_2008f_1629460096_579.png)
பாதரச கழிவுகள்
மேலும் கொடைக்கானலின் நடுவில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் பாதரச கழிவுகள் கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த ஆலையை அலுவலர்கள் கண்காணிக்கவும், பாதரச கழிவுகள் வெளியேறாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
![மூடப்பட்ட பாதரச தொழிற்சாலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-01-kodaikanal-hul-company-special-vs-spt-tn10030_20082021171816_2008f_1629460096_855.png)
முன்னாள் ஊழியர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : ஓணம் பண்டிகை தரிசனம்: இந்த ஆண்டும் ஏமாற்றத்துடன் திரும்பிய கோவை வாழ் கேரள மக்கள்!