கொடைக்கானல் அருகே கோவில்பட்டி எனும் மலைக் கிராமத்தில் அரசு வருவாய் துறைக்குச் சொந்தமான நிலங்களிலும், தனியாருக்கு சொந்தமான நிலங்களிலும் பல அரிய வகை மரங்களும், செடிகளும் உள்ளதன. இங்கு திடீரென ஏற்பட்ட காட்டு தீயினால் தோட்டப்பகுதிகளில் உள்ள மரங்கள், புதர்கள், காய்ந்த சருகுகள் தீயினால் கருகிவருகின்றன. மேலும் தொடர்ந்து காட்டுத் தீ வேகமாக பரவிவருகிறது. இதனால் காட்டுத் தீயானது அருகேயுள்ள வனப்பகுதிகளிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவினால் வன உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதில் அரியவகை மரங்கள் தீயில் எரிந்து சேதமடையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினரோ, தீயணைப்புத் துறையினரோ தற்போதுவரை எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பது வருந்தத்தக்கது என வன ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த காட்டுத் தீயால் கோவில்பட்டி மலைப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
மயிலுக்குப் போர்வை தந்தார் பேகன்... தீயில் சிக்கிய கரடிக்கு மேலாடையைத் தந்தவள் டோனி டஹெர்டி!
தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயிலினால் மரங்களின் இலைகள் காய்ந்துள்ளதால் உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும்; இல்லையேல் காட்டுப் பகுதிகளில் தீ ஏற்படலாம் என முன்கூட்டியே பல சூழலியல் செயற்பாட்டாளர்கள் எச்சரித்தனர். ஆனால் அதனைக் கண்டு கொள்ளாததன் விளைவாக தற்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விலைமதிப்பற்ற வன உயிர்களும், இயற்கையும் கடும் சேதத்துக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது.