திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது வனப்பகுதிகளில் நிலவும் வறட்சியின் காரணமாக வன விலங்குகள் நகர்ப்பகுதிக்குள் வலம் வர தொடங்கியுள்ளது.
இந்நிலையில், வத்தலகுண்டு, பழனி சாலையோரங்களில் சுற்றுலாப் பயணிகள் ஓய்விற்காக நிற்பார்கள். இவ்வாறாக வரும் சுற்றுலாப் பயணிகளிடம் உணவிற்காக காத்திருக்கும் குரங்குகள் கூட்டம், சுற்றுலாப் பயணிகளிடம் உணவு கேட்டு வரும்போது, உணவு அளிக்கின்றனர்.
மேலும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகையால் குரங்குகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளிடம் உணவுகளை பறித்தும் சென்று விடுகின்றன.
இது குறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், சாலை ஓரங்களில் இருக்கும் குரங்குகளுக்கு உணவு அளிக்க வேண்டாம். அது சட்டப்படி குற்றம். அதை மீறும் பட்சத்தில் வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்றனர். இதனிடையே, வனவிலங்குகளுக்கான உணவுகளை வனப்பகுதிக்குள் ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.