தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ள கொடைக்கானலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சமீபகாலமாக இங்கு வரும் இளைஞர்களுக்கு போதை பொருட்கள், போதை காளான்கள் எளிதாக கிடைப்பதாகவும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கொடைக்கானல் நகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா, எல்.எஸ்.டி ஸ்டாம்ப் ஆகிய பொருட்களை சிலர் விற்பனை செய்வதாக காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதனுக்கு தகவல் கிடைத்ததுள்ளது. இதனையடுத்து அவரது தலைமையில் ஆய்வாளர் ராஜசேகர், சார்பு ஆய்வாளர் காதர் மைதீன் தலைமையிலான காவல் துறையினர் அண்ணா ராமசாமி நகர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 30 எல்.எஸ்.டி ஸ்டாம்ப் வைத்திருந்த கேரள மாநிலம் கோழிக்கோடு பெருமலையைச் சேர்ந்த அபிநந்தன் (26) என்பவரை கைது செய்தனர். அதேபோல குருசடிமெத்து பகுதியில் பதுங்கியிருந்த கேரள மாநிலம் திருச்சூர் ஆலூ தாலுகா முகுந்தபுரம் பகுதியைச் சேர்ந்த லிபின் ஜான்சன் (21) என்பவர் கஞ்சா வைத்திருப்பதை கண்டுபிடித்து அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். போதை பொருள் விற்பனையில் தொடர்புடைய இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : 'ஒரு ஃபோன் காலில் போதை மாத்திரை ' - 5 போதை சப்ளையர்களைக் கைது செய்த காவல்துறை!