கொடைக்கானலில் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்தத் தடைசெய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களுக்கு மாற்று ஏற்பாடாக கொடைக்கானல் நகர்ப் பகுதியில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்படும் என்று நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில் கொடைக்கானல் நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், கொடைக்கானல் நகராட்சிப் படகு இல்லத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்ட சில தினங்களிலேயே செயல்படாமல் காட்சிப் பொருளாக மாறியது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
அதேபோல நகராட்சி அறிவித்த இடங்களில் இதுவரை குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்படவில்லை. தனியார் பங்களிப்புடன் ஒரு சில இடங்களில் பெயரளவிற்கு மட்டுமே இந்தக் குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் குடிநீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’ஓய்வு வயது உயர்வால் படித்த இளைஞர்கள் பாதிக்கப்படுவர்’