திண்டுக்கல் நத்தம் சாலையில் அமைந்துள்ள குடகனாறு இல்லத்தில் சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது, "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை ஜனநாயகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் விரோதமானது. உள்ளூர் மக்களின் சம்மதமே இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டால், அது பல அபாயகரமான திட்டங்களை மேற்கொள்ள வழி வகுக்கும்.
இந்தியாவில் ராமர் கோயிலுக்கான அவசியமே கிடையாது. கரோனா காலத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எல்லா நாடுகளிலும் கரோனா காலத்தில் மருத்துவமனைகள் கட்டினார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும் தான் இத்தனை ரணகளத்திற்கு இடையிலும் ராமர் கோயில் கட்டும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. உண்மையில் பாஜக இறை பக்தி கொண்ட கட்சியல்ல. அது இந்து ராஷ்ட்ரியத்தை கட்டமைக்க பாடுபடுகிறது.
நரேந்திர மோடி கூறுவதுபோல, மேக் இன் இந்தியா என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. உலகம் ஒரு சிறு கிராமமாக மாறி போன பின்பு, எப்படி நாம் நம்முடைய பொருட்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்த முடியும். இதேபோல பிற நாடுகள் கூறினால் நமது ஏற்றுமதி என்னவாகும். மக்களுக்கு அவர்களுக்குத் தேவையான பொருட்களை அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யும் உரிமை உள்ளது. இந்தத் தேர்வை மேக் இன் இந்தியா மூலம் தடுப்பது எந்த வகையிலும் சரி கிடையாது" என்றார்.
'சசிகலா தலைமையில் அதிமுக செயல்படுமா?' என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "எம்ஜிஆர், ஜெயலலிதா காலம்தொட்டு அதிமுக எப்போதும் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட்ட கட்சி. அதனால் சசிகலா வெளியில் வரும்போது கண்டிப்பாக அவரது தலைமையின் கீழ் அதிமுக செயல்படும் என்பது எனது அரசியல் பார்வை. ஏனெனில், இந்த அரசாங்கமும், கட்சித் தலைமையும் ஒரு ஆக்ஸிடென்டல் லிடர்ஷிப் (Accidental Leadership) என்று தான் கூற வேண்டும். தவறுதலாக ஒரு விபத்தின் விளைவாக ஏற்பட்ட ஒரு அரசியல் நகர்வு. எனவே, சசிகலாவின் வருகை அதிமுக, அமமுக-வை ஒன்றிணையச் செய்யும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கு மீறல் - கார்த்திக் சிதம்பரம் எம்.பி. மீது வழக்குப்பதிவு