திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவில் ஆடலூர், பன்றிமலை, கே.சி. பட்டி, பாச்சலூர், சோலைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, தடியன்குடிசை, குப்பம்மாள்பட்டி, அமைதி சோலை, டி.கோம்பை உட்பட 20க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் 'குட்டை கொம்பன்' என்ற ஒற்றை யானையும்; 9-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளும் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வந்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புப் பகுதி, போக்குவரத்து நிறைந்த மக்கள் செல்லும் சாலைகள் மற்றும் குடியிருப்பை ஒட்டிய மலைப்பகுதியிலும் யானைகள் தொடர்ந்து வந்து சென்றதால் பொதுமக்கள் அச்சத்துக்கு உள்ளாயினர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மக்களை அச்சுறுத்தி வந்த குட்டைக்கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானையைப் பிடிக்க, டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து வரவழைக்கப்பட்ட கலீம் மற்றும் சின்னத்தம்பி ஆகிய 2 கும்கி யானைகள் காட்டு யானைகளை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
56 வயதான கலீம் யானை 1972லிருந்து ஆனைமலை வனத்துறையில் கும்கியாக செயல்பட்டு வருகிறது. கலீமை பொறுத்தவரை அதிக அனுபவம் கொண்டது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் யானைகளை பிடிக்கவோ அல்லது விரட்டுவதற்கோ கலீம் யானை தான் சென்று வருகிறது. இதுவரை 99 முறை யானைகளை விரட்டியும், பிடிக்கவும் செய்துள்ள கலீமிற்கு இது 100ஆவது அசைன்மென்ட்.
கலீமின் அனுபவத்திற்கு நேர் மாறாக தனக்கு கொடுக்கப்பட்டிற்கும் முதல் டாஸ்கிற்காகவும் தன்னுடைய முதல் அனுபவத்திற்காகவும் களமிறங்கியிருக்கிறது, சின்னத்தம்பி. 26 வயதான சின்னத்தம்பி 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மக்களிடையே பிரபலமாக வலம் வந்து மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததால், டாப்சிலிப் பகுதிக்கு பிடித்துச்செல்லப்பட்டு 13 மாத கால பயிற்சிக்குப்பின் தற்போது கும்கி யானையாக மாற்றப்பட்டு, தனது முதல் பணியை செய்ய காத்திருக்கிறது. கலீமை விட உருவத்தில் பெரியதாக சின்னத்தம்பி இருப்பதாலும்; கலீம் இன்னும் மூன்று ஆண்டில் ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளதாலும் கலீமின் இடத்தை நிரப்புவற்கு சின்னத்தம்பியை தான் நம்பி உள்ளனர், வனத்துறையினர்.
இந்த அசைன்மென்ட்டில் ’சின்னத்தம்பி’ சரியாக செயல்படும்பட்சத்தில் கலீமின் இடம் சின்னத்தம்பிக்கு கிடைத்துவிடும். காட்டு யானையாக பிடிக்கப்பட்டு கும்கியாக மாற்றி, காட்டு யானைகளையே விரட்டுவதற்கே வந்திருக்கும் சின்னத்தம்பியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதனை காண பொதுமக்களிடையேயும் வனத்துறையினரிடையேயும் ஆவல் பெருகியுள்ளது.
இந்நிலையில் டி.கோம்பைப்பட்டியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை விரட்டுவதற்காக சென்ற கலீம் மற்றும் சின்னத்தம்பி யானைகளை பார்த்த காட்டு யானைகளும் மக்களை அச்சுறுத்திவரும் குட்டைக்கொம்பன் யானையும் பயந்து, காட்டுப்பகுதிக்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு தினங்களாக யானைக்கூட்டங்கள் ஊருக்குள் வருவது குறைந்திருக்கிறது.
கே.சி.பட்டி, தாண்டிக்குடி ஆகியப்பகுதிகளில் யானைக்கூட்டம் குடியிருப்புப்பகுதிகளில் வலம்வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வந்த நிலையில், தற்பொழுது சோலைக்காடு மலைக்கிராமத்தில் மக்கள் குடியிருப்புப்பகுதிகளில் காட்டு யானைக்கூட்டம் உலா வந்தது. அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுவும் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.எனவே, மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் தமிழ்நாடு அரசும் உடனடியாக செயல்பட்டு இந்த காட்டுயானைக் கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : சீனியர் கலீமும்... ஜூனியர் சின்னதம்பியும்.. காட்டுக்குள் ஸ்பெஷல் டாஸ்க்..