திண்டுக்கல்: கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருபவர் சுமதி. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் சேர்ந்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடமதுரை குஜிலியம்பாறை பகுதிகளில் தனிமையில் இருக்கும் மூதாட்டிகளை குறி வைத்து அவர்களுக்கு தின்பண்டங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு நகைகளை கொள்ளையடுத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், வேடசந்தூர் அரசு மருத்துவமனை அருகே ஒரு மூதாட்டியிடம் இருவர் பேசிக்கொண்டிருந்ததை ரோந்து பணியில் இருந்த முதன்மை காவலர் பார்த்தசாரதி கவனித்தார்.
உடனடியாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களிடம் சென்று விசாரித்தார், கிடுக்குப்பிடி விசாரணையில் மூதாட்டியிடம் மோசடி செய்தது கணேசன், சுமதி என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் சுற்றி வளைத்தனர். சுதாரித்துக் கொண்ட கணேசன் இருசக்கர வாகனத்தில் அங்கிருத்து தப்பிச் சென்றார்.
பின்னர், சுமதியை மட்டும் அழைத்துச் சென்ற காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் 5 மூதாட்டிகளிடம் இவர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, எவ்வளவு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன, எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய கணேசனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சி வளநாடு அருகே மணல் கொள்ளை - வாகனங்கள் பறிமுதல்