திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தலைமையில் கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளப் பணிகள் மற்றும் வரும் காலங்களில் தேவைக்கு ஏற்ப செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் காந்திராஜன் உள்ளிட்ட மருத்துவத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, 'அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கூறி உள்ளோம். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆக்ஸிஜன் தேவை பூர்த்தி செய்யப்படும்
ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கையும் விரைந்து எடுக்கப்படும். நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி, வரும் காலங்களில் தேவைக்கு ஏற்ப தற்போதே ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழனி, கொடைக்கானல் பகுதிகளிலும் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் பகுதியைப் பொறுத்தவரை, திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு தவிர, மற்ற அனைத்துப் பகுதிகளும் கரோனா பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது இரண்டு தனியார் பள்ளிகளில் 200 ஆக்ஸிஜன் படுக்கைகள் மற்றும் சாதாரண படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட அட்டை இல்லாதவர்களுக்கும் உடனடியாக காப்பீடு அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொகுப்பூதியத்தில் புதிதாக மருத்துவர்கள், செவிலியர் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளனர். அதன்பிறகு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு மையங்களுக்கு அவர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோய்க்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதோ, அதற்கேற்றார் போல தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அரசின் உத்தரவை மீறும் தனியார் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:வாகன சோதனையில் கையூட்டு வாங்கிய காவல் துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம்