Kodaikanal Tourist Places: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனத் துறை கட்டுப்பாட்டில் மோயர் பாயின்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை ஆகிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மோயர் பாயின்ட் வழியாக சுற்றுலா வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. மோயர் பாயின்ட், குணா குகை, தூண்பாறை ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல நபர் ஒருவருக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
பைன் மரக்காடுகளை இலவசமாகச் சென்று ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தங்களுக்கு விருப்பமான சுற்றுலா இடங்களை மட்டும் பார்ப்பதற்கும், வேண்டாத பகுதிகளைப் பார்க்காமல் செல்வதற்கும் வசதி இருந்தது.
இந்நிலையில் நேற்று (ஜனவரி 2) திடீரென்று இந்த நான்கு இடங்களைப் பார்ப்பதற்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 30 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மோயர் பாயின்ட் பகுதியில் இந்த நுழைவுக் கட்டணத்தை செலுத்திய பின்னர் தான் சுற்றுலாப் பயணிகள் மற்ற இடங்களுக்குச் செல்ல முடியும்.
இந்தக் கூடுதல் கட்டணத்தைக் குறைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டம்; ஜிஎஸ்டி கணக்கு ரத்து - அமைச்சர் மூர்த்தி