திண்டுக்கல்: 'மலைகளின் இளவரசி' என அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மலை பழங்களான பிளம்ஸ், பிச்சிஸ், பேரிக்காய், அவகோடா உள்ளிட்ட பழங்கள் கொடைக்கானலில் விளைவிக்கப்படுகின்றன. கோடைக்காலத்தில் அதிக அளவில் பிளம்ஸ், பிச்சிஸ் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். மேலும், கொடைகானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளம்ஸ் பழங்களை அதிகம் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
வருடம் முழுவதும் காத்திருந்து மே மற்றும் ஜூன் மாதங்களில் இப்பகுதியில் விளைவிக்கப்படும் பிளம்ஸ் மற்றும் பிச்சிஸ் உள்ளிட்ட பழங்கள் எடுக்கப்பட்டு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கப்பட்டு வருகின்றன. அத்துடன் விளைவிக்கப்பட்ட பிளம்ஸ் மற்றும் பிச்சிஸ் ஆகிய பழங்கள் பல நூறு டன்களில் சந்தைப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம், பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது.
பிளம்ஸ் பழ இரண்டாவது சீசனாக கருதப்படும், ஜனவரி மாதத்தில் கொடைக்கானல் வடகவுஞ்சி, பேத்துப்பாறை, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளில் பிளம்ஸ் பழங்கள் அதிக அளவில் காய்த்தது. இதனால், பிளம்ஸ் பழங்கள் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.400 வரை விற்பனையானது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை அவசியமானது - அப்துல் ரகுமான் பரபரப்பு பேச்சு!
இந்நிலையில், பிளம்ஸ் பழ மெயின் சீசனாக கருதப்படும் மே ஜூன் மாதங்களில் இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு மலைப் பழங்களின் விளைச்சல் வெறும் பத்து சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முன்வு, 100% என இருந்த இடத்தில் தற்போது வெறும் பத்து சதவீதம் மட்டும் பழங்கள் உள்ளதால் விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.
கொடைக்கானலில் மே மாதங்களில் மரம் முழுக்க பழங்கள் இருக்கக்கூடிய நிலையில், தற்போது 90 சதவீத மரங்களில் வெறும் இலைகள் மட்டும் காணப்படுவதாக பிளம்ஸ் மற்றும் பிச்சிஸ் பழ வியாபாரி மற்றும் விவசாயிகள் வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும், முதலீட்டாளர்கள் இதற்கான முழு காரணங்களையும் அறிய முடியாமலும் தவித்து வருகின்றனர்.
மலை பழங்களுக்கு வரலாற்று காணாத அளவிற்கு விளைச்சல் குறைந்துள்ளதற்கு பருவநிலை மாற்றமா? இல்லை நோய் தாக்குதலா? என்பது குறித்து அறிய வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஒரு கிலோ பிளம்ஸ் மொத்த வியாபாரத்தில் 100 முதல் 150 ரூபாயை கடந்துள்ளது. இதே நிலைதான் மற்ற பழங்களிலும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: CCTV Video: மூடிய கடையில் காய்கறி பர்ச்சேஸ் செய்த இளைஞர்!!