தமிழ்நாடு முழுவதும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை சமீபகாலமாகக் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. கிராமப் பகுதிகளை அதிக அளவில் கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து குற்றச் சம்பவங்களைத் தடுக்க மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை 101 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளில் தீவிர கவனம் செலுத்திவருகிறார்.
குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி அவர்களைக் கைதுசெய்ய கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கடந்த ஆகஸ்ட் முதல் தற்போது வரை 47 பேரை ஸ்ரீனிவாசன் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை குண்டாஸ் வழக்குகள் பதியப்பட்டுள்ள குற்றச் சம்பவங்கள் விவரம்:
திருட்டு, கொள்ளை வழக்கு 9, ரவுடிகள் வழக்கு 65, கஞ்சா, புகையிலை வழக்கு 16, பாலியல் வழக்கு 11 உள்ளிட்ட 101 வழக்குகளில் தொடர்புடையவர்கள் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு 95 பேர் குண்டாஸில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு 101 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: குண்டாஸ் இருந்தால் திமுகவில் பதவி - மதுரையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு