தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைகிறது. வடகிழக்கு திசையில் இருந்து பருவக்காற்று வீசுவதால் 5 நாள்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகலில் வெயிலும், இரவு நேரங்களில் மிதமான மழையும் பெய்து வந்தது.
இதனைத்தொடர்ந்து இன்று(நவ.5) காலை முதலே மேக மூட்டமும் சாரல் மழையும் பெய்து வந்தது. இதற்கிடையில் திடீரென மதியம் கொடைக்கானல் நகர் பகுதிகளான நாயுடுபுரம், ஏரிச்சாலை, அண்ணாசாலை, பேருந்து நிலையப்பகுதி மட்டுமின்றி கீழ்மலை பகுதிகளான பள்ளங்கி, அட்டுவம்பட்டி, வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே அங்கு குடிநீர் தட்டுப்பாடு குறையும் என்று கூறப்படுகிறது.