கோவிட்-19 வைரஸ் தொற்று உலக நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இதனால், உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்தை தொட்டுள்ளது. அதேபோன்று இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 170ஐ கடந்துள்ளது. இதனால், மத்திய அரசு தேசிய பேரிடராக கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் பொதுமக்கள் கூடும் கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
வைரஸ் தொற்றை தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், முக்கிய இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்படுகிறது. அதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள், ஆட்டோக்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது.
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்திற்கு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கிறது. இங்கிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணம் செய்கின்றனர். கிருமி நாசினி தெளிக்கும் பணியினை அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது பொதுமக்களுக்கு கை கழுவுதலின் அவசியம் குறித்தும், எவ்வாறு கைகழுவ வேண்டும் என்பது குறித்தும் நகர் நல அலுவலர் அனிதா பொதுமக்களுக்கு விளக்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு அரசு மருத்துவமனைகளிலும் கோவிட்-19 வைரஸ் தொற்று சிகிச்சைக்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர் விழிப்புணர்வின் மூலம் பழனிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இருபதாயிரத்தில் இருந்து ஆறாயிரமாக குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: குழந்தையை மறந்து ரயில் ஏறிய தந்தை!