திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பழனி தேவஸ்தான நிர்வாகமும் இணைந்து அமைக்கப்படவிருந்த மனநல காப்பகத்திற்கான தொடக்கப் பணிகள் ஆமைவேகத்தில் நடப்பதாகவும், அந்தப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனவும்,
பாதயாத்திரையாக பழனி வரும் பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள பக்தர்கள் தங்குமிடம் அனைத்திலும் கைப்பிடி உடன் கூடிய சாய்வு தள வசதியும், வெஸ்டர்ன் கழிப்பறை வசதி ஏற்படுத்தவும், தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் பணியமர்த்தப்படும் தனியார் பாதுகாவலர்களுங்கான பணிகளில் 5 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு தர வேண்டுமெனவும் வலியுறுத்தி பழனி கோயில் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
மேலும், மலைக்கோயிலுக்கு எளிதாக செல்ல ரோப் கார் வசதி உள்ளதுபோல, மின் இழுவை ரயில் மூலம் வருகை தரும் மாற்றுத்திறனாளிகள் அன்னதான மண்டபம் செல்வதற்கும் லிப்ட் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். சங்கத்தின் மாவட்டச்செயலாளர் பகத்சிங் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பழனி கோயில் இணை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.