திண்டுக்கல்: பழனி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் ஏராளமான வேளாண் தோட்டங்கள் உள்ளன. அங்கு புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த உழவரான தங்கராஜ் என்பவரது தோட்டத்து வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கிவைத்திருப்பதாக சத்திரப்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில், பழனி தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான காவல் துறையினர், தங்கராஜின் தோட்டத்து வீட்டில் சோதனை நடத்தினர். அதில் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளைக் கண்டறிந்தனர். இந்தத் துப்பாகிகளுக்கு எந்தவித உரிமமும் இல்லை.
விசாரணை
இதையடுத்து காவல் துறையினர் தங்கராஜ், அவரது உறவினரான கிருஷ்ணசாமி ஆகியோரைக் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் தோட்டத்துக்கு வரும் காட்டுப்பன்றிகள், முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாட துப்பாக்கிகளைப் பயன்படுத்திவந்தது தெரியவந்தது. மேலும் துப்பாக்கிகள் பதுக்கிவைத்திருந்ததற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா எனக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.