திண்டுக்கல்: குரும்பப்பட்டி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட மீனாட்சி நாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் பெரும்பான்மையான மாணவ மாணவியர்கள் 80க்கும் மேற்பட்டோர் குரும்பபட்டி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட மீனாட்சி நாயக்கன்பட்டி, சோலைராஜா காலனி, குரும்பபட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளி தரம் உயர்த்தப்படுவதற்கு முன்பு மீனாட்சி நாயக்கன்பட்டி ஊருக்குள் பள்ளி ஒன்று செயல்பட்டது. தற்போது அந்த பள்ளி உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு புதிய பள்ளி கட்டிடம், போக்குவரத்து வசதி இல்லாத திண்டுக்கல் புறவழிச்சாலைக்கும், எம்.வி.எம்.அரசினர் மகளிர் கலை அறிவியல் கல்லூரிக்கும், திண்டுக்கல் பழனி இரயில் பாதைக்கும் இடையில் கட்டப்பட்டுள்ளது.
புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்ட 2018 - 2019ஆம் ஆண்டு முதல் மாணவ, மாணவிகள் தொடக்கக் கல்வி முடித்து உயர்நிலை பள்ளி கல்விக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சேரும் போது உரிய பாதை வசதியோ, போக்குவரத்து வசதியோ இல்லாத காரணத்தினால் தனியார் மினி பஸ் மூலம் கட்டணம் செலுத்தி பள்ளிக்கு சென்று வந்தனர்.
மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் கட்டுமான, பஞ்சாலை தொழிலாளர்களாகவும், சாலையோர வியாபாரிகளாகவும் என உடல் உழைப்பு தொழிலாளர்களாக உள்ள போதிலும் குழந்தைகளின் போக்குவரத்துக்கு என மாதம் 1000 ரூபாய் வரை செலவு செய்ய முடியாத சூழல் உள்ளது. இருந்த போதிலும் பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கும் மத்தியில் தனியார் பேருந்து மூலம் கட்டணம் செலுத்தி பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைத்தனர்.
மினி பஸ்கள் இயங்காத நாட்களில் மாணவ மாணவிகள் புறவழிச்சாலை வழியே வந்து இரயில் பாதை மேம்பாலத்தின் கீழ் பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிக்கு செல்கின்றனர். இவ்வழியாக வரும் போது போதை பொருட்கள் பயன்படுத்தும் நபர்கள் ஆங்காங்கே இருப்பதும், மது பாட்டில்கள் உடைக்கப்பட்டு இருப்பதும் மாணவ மாணவிகள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவதற்கு தடையாக உள்ளது.
பள்ளி மாணவ, மாணவியருக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி ஊர் பகுதியில் இருந்து பள்ளி வர காலை, மாலை இரண்டு வேலைகளிலும் அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் முகேஷ் தலைமை வகித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பெற்றோர்கள் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: பிளம்ஸ் பழ சீசனில் குறைந்த விளைச்சல்; கொடைக்கானல் விவசாயிகள் வேதனை..