திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை பணி துவங்கியுள்ளது.
இதையடுத்து, கிராமப் புறங்களில் தனியார் பள்ளிகள் கவர்ச்சிகரமான முறையில் விளம்பரங்கள் மேற்கொள்வதால், கிராம மக்கள் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்புவது வழக்கமாகி வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்த பழைய வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியை முருகேஸ்வரி, கிராம மக்களிடம் மாணவா்களை அரசு பள்ளியில் சோ்க்க வலியுறுத்தி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது கிராம மக்கள் அவரிடம், தனியார் கல்வி நிறுவனங்களில் இணைய வழி கல்வி மற்றும் ஆங்கில மொழியை மாணவர்கள் சரளமாக பேச வைப்பதாக தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பயில்வது சிரமம் எனக் கூறினர்.
உடனே ஆசிரியை முருகேஸ்வரி அப்பகுதியில், அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் ஆங்கிலப் புத்தகம் கொடுத்து வாசித்துக்காட்டுமாறு கூறினார்.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவன் பிழையின்றி ஆங்கிலம் வாசித்துக்காட்டினார். ஆனால் தனியார் பள்ளியில் பயிலும் மாணவனால் ஆங்கிலத்தில் பிழையின்றி வாசிக்க முடியவில்லை.
இதையடுத்து, அரசு பள்ளியின் கல்வி தரம் குறித்து மக்களிடம் நேரடியாக விளக்கமளித்து மாணவா்களை அரசு பள்ளியில் சோ்க்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து பழைய வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர்கள் சோ்க்கை அதிகரித்துள்ளது.