மதுரை: பழனி முருகன் கோயிலில் பூஜைகள் செய்வதற்கு கட்டணங்கள், ஒரு பூஜைக்கு ரூபாய் 9.40 பைசா நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் கோயில் பங்கு ரூ.6.40, திருமஞ்சனம் 0.75 பைசா, சிரமதட்சணை ரூ.1, சொர்ண புஷ்பம் ரூ.1, மற்றும் அத்தியான பட்டர் 0.25 பைசா எனப் பிரித்து பங்கிட்டு கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
இதில் திருமஞ்சனம் செய்வதற்கான தொகையில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என அர்ச்சகர் தரப்பினர் பழனி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணை செய்யப்பட்டு அர்ச்சகரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணை செய்யப்பட்டது.
அதில் நீதிபதி கூறியதாவது, 'பிரசித்திபெற்ற பழனி முருகன் கோயிலில் திருமஞ்சனம் பூஜை செய்வதற்கான தொகை தங்களுக்கு வேண்டுமென குருக்கள், அர்ச்சகர் தரப்பில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். தற்போது பூஜைக்கான 75 பைசா தொகையைப் பெற அர்ச்சகர்கள் தகுதியுடையவர்களா அல்லது பண்டாரங்கள் தகுதியுடையவர்களா, இல்லை இருவருக்கும் பங்கீடு செய்வதா என முடிவு செய்ய வேண்டி உள்ளது.
பல்வேறு ஆவணங்கள் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பாக தாக்கல் செய்த ஆவணங்களைப் பார்க்கும்போது ஆரம்ப காலம் முதல் பண்டாரங்கள் தான் திருமஞ்சன நீரை தொன்று தொட்டு எடுத்து வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. மேலும் இந்த உரிமை பண்டாரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. குருக்கள் திருமஞ்சன சேவை நீரை எடுத்து வருவதாக எங்கும் குறிப்பிடவில்லை.
பண்டாரம் சமூகத்தைச்சேர்ந்தவர்களே திருமஞ்சனத்திற்கான புனித நீரை அர்த்தமண்டபம் வரை சுமந்து வருகிறார்கள் என்பது புலனாகிறது. எனவே, திருக்கோயில் நிர்வாகம் நிர்ணயித்துள்ள தொகையைப் பெற்றுக்கொள்ள பண்டாரம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே தகுதியானவர்கள்’ என உறுதிசெய்துள்ளது.
இதனை உறுதி செய்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அர்ச்சகர் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து திருமஞ்சனத்திற்கான கட்டணத்தைப் பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: இந்து அறநிலையத்துறையின் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகளைத் திறந்துவைத்த முதலமைச்சர்