திண்டுக்கல்: கம்பிளியம்பட்டி கிராமத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா 2ஆம் கட்ட நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டெல்டா பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எம்பி, எம்எல்ஏ, மக்கள் பிரதிநிதிகள் எங்கெல்லாம் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களோ, அங்கெல்லாம் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் கொள்முதல் செய்கின்ற நெல்லுக்கு உடனடியாக பணம் வழங்கவும் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரக்கூடிய நெல்களை வைத்து, கடந்த காலத்தில் ஐந்து முதல் ஆறு நாள் காத்திருக்க வேண்டிய நிலையிருந்தது.
இனிமேல் அந்த நிலைமை ஏற்படக்கூடாது. 24 மணி நேரத்தில் நெல் கொள்முதல் செய்து அந்த பணத்தை வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் மழைக்காலத்தில் நெல் சேதாரம் ஆகாமல் இருக்க சைலோ முறையை கொண்டு வந்து நவீன அரிசி ஆலைகள் தொடங்கப்படும். மக்களுக்கு தரமான அரிசி கொடுக்க வேண்டும், அதேபோல் எடையும் சரியாக இருக்க வேண்டும் முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்" என்று கூறினார்.