திண்டுக்கல்: பழனி அருகே உள்ள மானூர் ஆற்றுப்பாலம் அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு கும்பகோணத்தைச் சேர்ந்த கார்த்தி (24) என்பவர், தோட்டத்திலேயே தங்கி காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (அக் 29) வழக்கம்போல கார்த்தி தோட்ட காவல் பணியில் இருந்துள்ளார்.
அப்போது சரியாக நள்ளிரவு 12 மணியளவில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் எழுந்து வந்த கார்த்தியின் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதில் காயமடைந்த கார்த்தி, பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், பழனி அரசு மருத்துவமனையில் குண்டை அகற்ற முடியாததால், மேல்சிகிச்சைக்காக கார்த்தி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த பழனி தாலுகா காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்து மேலும் சில துப்பாக்கி குண்டுகளை சேகரித்தனர். மேலும் காவலாளி கார்த்தியை துப்பாக்கியால் சுட்டவர்கள் யார்? எதற்காக சுட்டனர்? வேட்டையாட வந்த நபர்கள் சுட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலத்தில் உரிமையாளர், குத்தகைதாரர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு