திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள உலகப் புகழ்பெற்ற புனித சலேத் அன்னை ஆலயத்தில் வருடந்தோறும் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும். கரோனா பரவல் காரணமாக திருவிழா தடைபட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 1) கொடியேற்ற சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது. இந்த திருப்பலிக்கு கொடைக்கானல் வட்டார அதிபரும், பங்குத் தந்தையுமான எட்வின் சகாயராஜ் தலைமை தாங்கினார்.
வழக்கமாக ஆடம்பரமாக நடைபெறும் கொடியேற்ற நிகழ்வு, கரோனா பரவல் காரணமாக எளிமையாக நடைபெற்றது. இந்த கொடியேற்ற விழாவில் கிறிஸ்தவர்கள் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி கலந்துகொண்டனர்.
இதையடுத்து வரும் ஆகஸ்ட் 14, 15 ஆகிய இரு நாட்களும் அன்னையின் சப்பர பவனி நடைபெறாது எனவும், அரசின் விதிமுறைகள் படி இரண்டு நாட்களும் அமைதியான முறையில் திருப்பலி பூஜைகள் மட்டுமே நடைபெறும் என்றும் பங்குத் தந்தை தெரிவித்துள்ளார்.