திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டபிரபு (33). இவரது மனைவி நாகலட்சுமி (24). இந்த தம்பதிக்கு 5 வயதில் ஹரிணி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த நவம்பர் 23ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.
கணவன் - மனைவி தகராறு
இந்நிலையில், நேற்று மது அருந்திவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்தார் மணிகண்டபிரபு. பின்னர் நாகலட்சுமியிடம் பணம் கேட்டு மிரட்டி 500 ரூபாய் பெற்றுக்கொண்டு, மீண்டும் மது அருந்திவிட்டு நாகலட்சுமியிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார். அப்போது மணிகண்டன், நாகலட்சுமியை தாக்க முயன்றபோது அவர் தப்பிச்சென்றதால், அருகில் தொட்டியில் இருந்த பெண் சிசுவை வீட்டின் சுவற்றில் அடித்துக் கொலை செய்தார்.
இதனிடையே, நாகலட்சுமிக்கு திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராம செவிலியர் அமரா என்பவர் வீட்டிற்கு வந்து தடுப்பூசி, மருத்துவ ஆலோசனை வழங்கிவருவது வழக்கம். அதன்படி செவிலியர் அமரா, நேற்று நாகலட்சுமி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லாததைக் கண்டு அருகில் இருந்தவரிடம் விசாரித்துள்ளார். அப்போது கணவன் மணிகண்டபிரபுக்கும் - நாகலட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், மணிகண்டபிரபு குழந்தையை கொலை செய்து அருகில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் செவிலியர் புகார் அளித்தார். அதன்பேரில் டிஎஸ்பி சீமைச்சாமி, வட்டாட்சியர் சரவணன், அரசு மருத்துவர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன்பின் குழந்தை புதைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, மணிகண்டபிரபுவை நேரடியாக புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று, குழந்தையை தோண்டி எடுத்தனர்.
கொலையை மறைத்த தாய்
பிறகு குழந்தைக்கு உடற்கூறாய்வு செய்து மீண்டும் அதே இடத்தில் தகனம் செய்தனர். கொலை சம்பவம் தொடர்பாக ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்ட பிரபுவை கைது செய்தனர். மேலும், இக்கொலையை மறைத்த குழந்தையின் தாய் நாகலட்சுமி மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
பெற்ற குழந்தையை தகப்பனே அடித்துக் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஆசன வாய் குறைபாட்டால் பிறந்த குழந்தை - மருத்துவமனையில் விட்டுச் சென்ற உறவினர்கள்!